ஓணம் விடுமுறை எதிரொலி கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் ஓணம் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில்  தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஓணம் விடுமுறை என்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரியிலும் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

 சுற்றுலாபயணிகள் குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்து லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்கள்  அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு, கடலில் குளியல் போட்டனர். அதன் பிறகு பகவதிஅம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகுகளில் சென்று பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதே போல காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், காட்சி கோபுரம், முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை, சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பொழுது போக்கு பூங்கா, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலையில் சூரியன் மறையும் காட்சியை காண சன்செட் பாயிண்ட் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

Related Stories: