நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸ் தகுதி பெற்றார். அல்கரஸ் - சின்னர் மோதிய காலிறுதி ஆட்டம் ஐந்தேகால் மணி நேரத்துக்கு நீடித்தது. காலிறுதியில் இத்தாலியின் யானிக் சின்னருடன் (21 வயது, 13வது ரேங்க்) மோதிய அல்கரஸ் (19 வயது, 4வது ரேங்க்) அதிரடியாக புள்ளிகளைக் குவித்து முதல் செட்டை 6-3 என எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் யானிக் சின்னர் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. 2வது மற்றும் 3வது செட்டை சின்னர் 7-6 (9-7), 7-6 (7-0) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற ஆட்டத்தில் அனல் பறந்தது. அதன் பிறகு வியூகத்தை மாற்றி சின்னரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அல்கரஸ் 6-3, 6-7 (7-9), 6-7 (0-7), 7-5, 6-3 என 5 செட்களில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். புதன் கிழமை இரவு தொடங்கிய இந்த போட்டி வியாழன் அதிகாலை 3.00 வரை நீடித்தது (5 மணி, 15 நிமிடம்), யுஎஸ் ஓபன் வரலாற்றில் 2வது நீண்ட ஆட்டமாக அமைந்ததுடன், மறுநாளில் அதிக நேரத்துக்கு நீடித்த வகையில் புதிய சாதனையாகவும் அமைந்தது.
