பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்திய வைரலாஜி நிறுவனம் ஆகியணை இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்தன. இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கின் வழியாக உட்செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது. சுமார் 4000 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இதில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. பரிசோதனைகள் முடிந்த நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக அரசின் அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

இதனை தொடர்ந்து பாரத் பயோடெக்கின் மூக்கின் வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாட்டுக்கு  இந்திய மருந்து கட்டுப்பாடு மையம் நேற்று அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனாவுக்கு எதிரான போரில் மிகப்பெரிய ஊக்கம் கிடைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டுப்படுத்தப்பட்ட முறையிலான அவசரகால பயன்பாட்டுக்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கின் வழியேயான கொரோனா தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: