நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

நெல்லை : தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 80 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் வி.கே.புரம் திருவள்ளுவர் நகர், முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் அருகில், நெல்லை வண்ணார்பேட்டை பேராத்துசெல்வி அம்மன் கோயில் அருகில், களக்காடு அருகே சிதம்பராபுரம் அருகில், கூத்தன்குழி சர்ச் அருகில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் ஏற்படும் இடர்களின் போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

 நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அருகில் நடந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிக்கு நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர், தாசில்தார் செல்வம் தலைமை வகித்தனர். நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், பாளை தீயணைப்பு நிலைய அலுவலக பொறுப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன், தேசிய பேரிடர் மீட்புகுழு ஒருங்கிணைப்பாளர் ரவி முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள் 84 பேர், ஆற்றில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.  இந்த ஒத்திகை நிகழ்ச்சி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் நடந்தது. ரப்பர் படகு உள்ளிட்ட பேரிடர் மீட்பு கருவிகள் பயன்படுத்தி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

மேலும் வெள்ளத்தின் போது கையில் எளிதாக கிடைக்கும் பொருட்களை மிதவைகளாக பயன்படுத்தி ஆபத்திலிருந்து தப்பிப்பது மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு அவருக்கு முதலுதவி வழங்குவது போன்ற ஒத்திகை நிகழ்வுகள் செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஆப்தமித்ரா தன்னார்வ தொண்டர்கள், நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் டிரைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: