நாடு நாடாக திரிந்து 51 நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் இலங்கைக்கு திரும்பினார் கோத்தபய, ஆடம்பர அரசு பங்களா: 24 மணி நேர பாதுகாப்பு

கொழும்பு: மக்களின் கடும் எதிர்ப்பால் நாட்டை விட்டு ஓடிய இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாடு நாடாக சுற்றி 51 நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில் இலங்கை திரும்பினார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் விலைவாசிகள் உயர்ந்தும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு  உள்ளனர். இதன் காரணமாக, போராட்டங்கள், வன்முறைகள் வெடித்தன. இதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, கடந்த ஜூலை 13ம் தேதி தனது மனைவி லோமாவுடன்  நாட்டை விட்டு தப்பிச் சென்றார். முதலில் மாலத்தீவுக்கு சென்றார். அங்கும் அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து கடந்த ஜூலை 14ம் தேதி  தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அங்கு சில வாரங்கள் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்பட்டதால்,  அங்கிருந்து  தாய்லாந்து சென்றார். அங்கு ஓட்டலை விட்டு வெளியே வரக்கூடாது என  அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, இலங்கையில்  கோத்தபயவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெருமுனாவின் ஆதரவுடன், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு, கோத்தபய நாடு திரும்ப முடிவு செய்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ரணிலுக்கு பெருமுனா அழுத்தம் கொடுத்தது. அதற்கு அவர் பணிந்தார். இந்நிலையில், 51 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து கோத்தபய இலங்கை திரும்பினார். அவருடைய மனைவி லோமாவும் உடன் வந்தார். கோத்தபயவை  விமான நிலையத்தில் அவருடைய கட்சி எம்பி.க்கள், அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் கொழும்புவில் உள்ள விஜேரமா மாவதா என்ற இடத்தில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ஆடம்பர அரசு பங்களாவுக்கு அவர் சென்றார். இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோத்தபய மீண்டும் நாடு திரும்பி இருப்பதால், மக்களின் கோபம் அதிகமாகி இருக்கிறது. இதனால், மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Related Stories: