ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று; இலங்கை-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்; பாகிஸ்தானுடன் இந்தியா நாளை பலப்பரீட்சை

சார்ஜா: 6 அணிகள் பங்கேற்றுள்ள 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்தப்பட்டது. ஏ பிரிவில் இந்தியா அணி பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் ஹாங்காங்கை வென்று 2வது இடம்பிடித்து தகுதி பெற்றது. 2 போட்டியிலும் தோல்வி அடைந்த ஹாங்காங் தொடரில் இருந்து வெளியேறியது.

பி பிரிவில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் 2 வெற்றிகளுடன் (இலங்கை, வங்கதேசத்தை வீழ்த்தி) கம்பீரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. இலங்கை, வங்கதேசத்தை வென்று தகுதி பெற்றது. வங்கதேசம் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து நடையை கட்டியது.

ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பி பிரிவில் முதல் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான், இலங்கையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் லீக் சுற்றில் மோதிய போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்ற நம்பிக்கையில் ஆப்கானிஸ்தான் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன் வலு சேர்க்கின்றனர். முஜீப்-உர்-ரஹ்மான், ரஷித்கான் சுழலிலும், பசல்ஹக் பாரூக்கி வேகத்திலும் மிரட்டுகின்றனர்.

முஜீப் சார்ஜாவில் 4 போட்டியில் 10 விக்கெட் எடுத்துள்ளார். மறுபுறம் இலங்கை லீக் சுற்றில் வங்கதேசத்தை போராடி வென்று சூப்பர் 4 சுற்றுக்குள் வந்துள்ளது. ஆப்கனிடம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க வேண்டிய நெருக்கடியும் உள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக குசால் மெண்டிஸ், கேப்டன் ஷனகா சிறப்பாக ஆடினர். மற்றவீரர்கள் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இலங்கை பந்துவீச்சு மோசமாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை விளையாடிய 13 டி.20 போட்டிகளில் பவர்பிளேவில் மட்டும் சராசரியாக 42 ரன்களை கொடுத்துள்ளது. சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா மட்டும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். சிறிய மைதானமான சார்ஜா சுழலுக்கு சாதகமாக உள்ளது. தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் பனியின் தாக்கம் இல்லை. இதனால் டாஸ் முக்கிய காரணியாக இருக்காது. இரு அணிகளும் இதற்கு முன் 2 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்றில் நாளை 2வது போட்டியில் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியா, பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டி துபாயில் நடக்கிறது.

Related Stories: