ஆசிய கோப்பை டி20 வரலாற்றில் பாகிஸ்தான் புதிய சாதனை: 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜா: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சூப்பர் 4 சுற்றை இறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய பணிக்க அதன்படி முதலில் களமிறங்கினர் ரிஸ்வானும், பாபர் ஆஸமும். இந்தியாவுக்கு எதிரான போட்டியை போலவே பாபர் ஆஸம் இந்தப் போட்டியிலும் பெரிய ரன்கள் குவிக்கத் தவறினார்.

9 ரன்களில் அவர் வெளியேறிய பிறகு ரிஸ்வான் உடன் இணைந்தார் ஃபகார் ஜமான். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.ஜமான் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின், குஷ்தில் உடன் இணைந்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்து ரிஸ்வான் அணிக்கு ரன்களை தேடிக்கொடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. ஹாங்காங் தரப்பில் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியவர் இஷான் கான்.

இதன்பின், பெரிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த ஹாங்காங் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. நிதானமாக ஓப்பனிங் கொடுத்த கேப்டன் நிஜாகத் கானையும் ஒன் டவுன் இறங்கிய பாபர் ஹயாத்தையும் மூன்றாவது ஓவர் வீசிய நசீம் ஷா அடுத்தடுத்து அவுட் ஆக்கி அந்த அணியின் சரிவை தொடங்கிவைத்தார். அடுத்த ஒரு ஓவர் கூட தாக்குபிடிக்காத மற்றொரு ஓப்பனர் யாசிம் முர்தாசா 2 ரன்களுக்கு நடையை கட்டினார்.

இதன்பின் ஸ்பின்னர்கள் ஷதாப் கான் மற்றும் நவாஸ் இணைந்து ஹாங்காங் அணியை ஒரு கை பார்த்தனர். இவர்களின் ஸ்பின் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹாங்காங் வீரர்கள் வருவதும்போவதுமாக இருந்தனர். இறுதியில் 10.4 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஹாங்காங் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்விகண்டது. அதேநேரம் 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 4 விக்கெட், நவாஸ் 3 விக்கெட் நசீம் ஷா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பாகிஸ்தானின் டி20 வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால், இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியை 60 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்றதே டி20 வரலாற்றில் பாகிஸ்தான் பெற்ற பெரிய வெற்றியாக இருந்தது. இன்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டு ஹாங்காங்கை 38 ரன்களுக்கு சுருட்டி 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

Related Stories: