ஆபரேஷன் தாமரை மூலம் எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு 58 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. அதில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்பதாக பாஜ கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சிசோடியாவின் வீடு உட்பட பல இடங்களில் ரெய்டு நடத்தினர். முறைகேடு குறித்து அமலாக்கத்துறையும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சிசோடியா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்தது.

அதோடு, ஆட்சியை கலைக்க கடந்த வாரம் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் 40 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் தலா ரூ.20 கோடி தருவதாக பாஜ சார்பில் பேரம் பேசப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். மேலும், ‘பாஜவுக்கு எந்த ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ.வும் விலை போகவில்லை. ஆபரேஷன் தாமரை தோல்வி அடைந்து விட்டது’ தெரிவித்தார். இதை நிரூபிக்க, ஆம் ஆத்மி அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன் வந்தது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு டெல்லி சட்டப்பேரவையில் நேற்று நடந்தது. இதில் கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக 58 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனால் கெஜ்ரிவால் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. சபாநயாகர் ராம் நிவாஸ் கோயல் கனடாவில் இருக்கிறார். இதனால், துணை சபாநாயகர் அவையை நடத்தினார். எம்எல்ஏ நரேஷ் பால்யன் ஆஸ்திரேலியாவில் உள்ளார். சத்யேந்தர் ஜெயின் சிறையில் இருக்கிறார். இதனால், இவர்கள் 4 பேர் வாக்களிக்கவில்லை.

* குஜராத்தில் வாக்கு சதவீதம் உயர்வு

குஜராத்தில் இந்தாண்டு டிசம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜ மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், இந்த தேர்தல் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், டெல்லி துணை முதல்வர் சிசோடிய வீட்டில் சிபிஐ சோதனைக்கு பிறகு, குஜராத்தில் ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 4% உயர்ந்திருப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

* ஆம் ஆத்மி நாடகம் மீண்டும் தொடங்கியது

டெல்லியில் பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில் வாக்கு சதவீதம் உயர்ந்துவிட்டதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியது தவறு. 3000-4000 ஆண்டுகள் மனித வரலாற்றிலேயே கெஜ்ரிவால் கட்சியானது மிகப்பெரிய யூ டர்ன் அல்லது செல்லப்பிராணி கட்சியாகும். ஆம் ஆத்மியின் நாடகம் மீண்டும் தொடங்கிவிட்டது’ என்று தெரிவித்தார்.

Related Stories: