டாப்சிலிப் முகாமில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்ட வளர்ப்பு யானைகள்

ஆனைமலை: ஆனைமலையை அடுத்த டாப்சிலிப் முகாமில், நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டன. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் அருகேயுள்ள கோழிக்கமுத்தி முகாமில் வனத்துறையினரால், யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. டாப்சிலிப்புக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுடன், அவர்கள் கோழிக்கமுத்தி முகாமிற்கு சென்று யானைகளை கண்டு ரசிக்கின்றனர்.

இதில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, டாப்சிலிப் அருகே உள்ள கோழிக்கமுத்தி முகாம்களில் உள்ள யானைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முகாம்களில் உள்ள யானைகளுக்கு சிறப்பு பூஜை வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது. மேலும் பொங்கல் வைத்து யானைகளுக்கு ஊட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று மண்டியிட்டி வழிபாடு நடத்தின. உடன் வந்த யானைகள் கோயில் மணியை இசைத்தன.

முன்னதாக, முகாம் வழியாக செல்லும் ஆற்றில் யானைகளை நீராட்டி, அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு, மாலை அணிவித்து வரிசையாக நிறுத்தி வைத்தனர். பின் யானைகள் முன்பு பொங்கல் வைத்து வழிப்பட்டனர். இதைத்தொடர்ந்து யானைகளுக்கு கரும்பு, வெல்லம், தேங்காய்,பழம்,கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்ட உணவு பொருட்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், டாப்சிலிப் வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: