பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திருவான்மியூரில் கடத்தப்பட்ட வாலிபர் தாம்பரத்தில் மீட்பு: இருவரிடம் விசாரணை

துரைப்பாக்கம்: பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் திருவான்மியூரில் கடத்தப்பட்டார். போலீசார் அவரை தாம்பரம் பகுதியில் வைத்து பத்திரமாக மீட்டனர். மேலும் அவரை கடத்தியை 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(38), டிரேட் மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். சந்திரசேகரிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையில் துணிக்கடை வைத்து நடத்திவரும் சுரேஷ்குமார் மற்றும் பிரகாஷ் இருவரும் ரூ.15 லட்சம் டிரேட் மார்க்கெட்டில் முதலீடு செய்ய கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடமாக வாங்கிய பணத்தை திருப்பி தராததால் பலமுறை சந்திரசேகரை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது எண்ணை சந்திரசேகர் பிளாக் செய்து வைத்ததாக தெரிகிறது. இதனால் சந்திரசேகரிடம் எப்படியாவது பணத்தை வாங்கிட வேண்டும் என்று அவரை பின் தொடர்ந்து சுரேஷ்குமார், பிரகாஷ் ஆகிய இருவரும் சென்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் அவரது இரு நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் மீண்டும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவருடைய சொகுசு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சுரேஷ்குமார், பிரகாஷ் மேலும் ஒருவர் என மூவரும் சேர்ந்து திருவான்மியூரில் வைத்து காரை மடக்கி சந்திரசேகருடன் வந்த இருவரை தாக்கி காரில் இருந்து இறக்கிவிட்டனர். பின்னர் சந்திரசேகரை மட்டும் கடத்திக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நண்பனை மூன்று பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றதாக அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். பின்னர் போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து காரில் பொருத்தப்பட்டிருந்தத ஜிபிஎஸ் கருவியை வைத்து கண்காணித்துக்கொண்டிருந்த போலீசார் தாம்பரம் அருகே ரோந்து பணியில் இருந்தபோது கடத்தப்பட்ட காரை மடக்கி பிடித்தனர். பின்னர் கடத்தப்பட்ட சந்திரசேகர் மற்றும் சுரேஷ்குமார், பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் என நான்கு பேரை மீட்டு திருவான்மியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கிரிப்டோ கரன்சி டிரேடிங் செய்யும் சந்திரசேகர், சுரேஷ்குமாரிடம் ரூ.15 லட்சம் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்னை ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரை கடத்தியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை கடத்திய இருவரிடம் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: