பி-டீம், சி-டீம் என்பதை எல்லாம் தாண்டி பாஜகவின் ‘ஏ-டீம்’ குலாம் நபி ஆசாத்; காஷ்மீர் காங். மாஜி தலைவர் காட்டம்

காஷ்மீர்: பாஜகவின் ‘ஏ-டீம்’ ஆக குலாம் நபி ஆசாத் உருவெடுத்துள்ளார் என்று காஷ்மீர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் காட்டமாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத், வரும் செப்.  4ம் தேதி ஜம்முவிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் ஆதரவாளர்கள் கூட்டத்தில்  பங்கேற்கிறார். அப்போது புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட  உள்ளார். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சரூரி  கூறுகையில், ‘ஜம்மு - காஷ்மீரில் குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக  கவுன்சிலர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள் உட்பட  500க்கும் மேற்பட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா  செய்துள்ளனர். அவர்கள் குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக உள்ளனர்.

வாக்காளர்  பட்டியல் சிறப்புத் திருத்தம் முடிந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரில் நவம்பர்  25ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், 90 சட்டமன்ற  தொகுதிகளில் குலாம் நபி ஆசாத்தின் கட்சி போட்டியிடும். ஜம்மு காஷ்மீரின்  அடுத்த முதல்வராக குலாம்நபி ஆசாத் தேர்வு செய்யப்படுவார்’ என்றார். இவரது கருத்துக்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ.மிர் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் சில கட்சிகளை நாங்கள் பாஜகவின் பி-டீம், சி-டீம் என்று சொல்லி வந்தோம். ஆனால் இப்போது பாஜகவின் ஏ-டீம் (குலாம் நபி ஆசாத் அணி) ஒன்று கிளம்பி உள்ளது. குலாம் நபி ஆசாத்தை நம்பினோம். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக காங்கிரசில் இருந்து வெளியேறிவிட்டார். சோனியா காந்தி நாடு திரும்பியதும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்’ என்றார்.

Related Stories: