நொய்டாவில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கட்டிடம் மதியம் 2.30 மணிக்கு தகர்ப்பு: மக்கள் வெளியேற்றம்: விமானங்களுக்கு தடை

புதுடெல்லி: நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள், இன்று மதியம் 2.30க்கு வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் எம்ரால்ட் கோர்ட் என்ற வளாகத்துக்குள் கட்டப்பட்டுள்ள 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இவற்றை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ‘எடிபைஸ்’ என்ற நிறுவனம், 3,700 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி இன்று மதியம் 2.30க்கு கட்டிடத்தை தகர்க்கிறது.

* கட்டிடத்தை இடிக்கும் இடத்துக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதையும் போலீஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

* கட்டிடத்தின் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

* அசம்பாவிதங்கள் நடந்தால், அவசர சிகிச்சைக்காக நொய்டா மருத்துவமனைகளில் 50 படுக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

* கட்டிடம் நொறுங்கும்போது பறக்கும் தூசு மண்டலத்தை கட்டுப்படுத்த, கட்டிடம் முழுவதும் தடியான பிளாஸ்டிக் திரையால் மூடப்பட்டுள்ளது.

* தூசு மண்டலத்தை உடனடியாக தண்ணீரை பீச்சியடித்து கட்டுப்படுத்த, தண்ணீர் நிரப்பப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

* கட்டிடம் தகர்க்கப்படும் முன்பாக, அதை  சுற்றி ஒரு மணி நேரத்துக்கு ஒரு நாட்டிகல் மைல் தொலைவுக்கு விமானங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* 9 நொடிகளில் கட்டிடம் மொத்தம் தரைமட்டமாகி விடும். இடிப்பதற்கான மொத்த செலவு ரூ.20 கோடி. இதில், ரூ.5 கோடியை இதை கட்டிய சூப்பர்டெக் நிறுவனம் அளிக்கும்

* இந்த கட்டிடத்தில் உள்ள 3 படுக்கையறை வீடுகள் ஒவ்வொன்றின் விலை ரூ.1.3 கோடி. இவற்றை விற்றிருந்தால், சூப்பர்டெக்கிற்கு ரூ.1,200 கோடி கிடைத்திருக்கும்.

Related Stories: