மொய் விருந்து பேராவூரணி மக்களின் பழக்கங்களில் ஒன்று தமிழகத்தின் பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார்

* பாஜ சொத்து மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் உயர்ந்தது எப்படி?

* எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க எங்கிருந்து பணம் வந்தது?

* திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தாக்கு

சென்னை: மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி கூறினார்.

 திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி கூறியதாவது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த மொய் விருந்து பற்றிய அறிக்கையை படித்தேன். தமிழர்களின் பண்பாடு மற்றும் தமிழ்நாட்டின் அரசியலும் அவருக்கு தெரியாது என்பதற்கு இது தான் சாட்சி. பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் இந்த மொய் விருந்து என்பது அப்பகுதியில் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.  

குறிப்பாக அந்த பகுதிகளில் நடக்கும் மொய் விருந்துகளில் இயல்பாகவே ரூ.5 கோடி, ரூ.6 ேகாடி என்று வசூலாகும். ஏனென்றால் அந்த மக்களின் பழக்க வழக்க சட்டத்தின் படி ஒவ்வொரு குடும்பமும் ஆயிரத்தில் தொடங்கி ஒரு லட்சம் வரை அவர்கள் வசதிக்கு ஏற்ப மொய் வைப்பார்கள். இந்த நடைமுறை தென்மாவட்டம் வரை நீண்டு கொண்டிருக்கிறது. இந்த பணத்தை முழுக்க முழுக்க கிப்ட் என்று தான் எடுக்க முடியும். மொய் என்பது இந்நாட்டு சட்டப்படி கிப்ட் தான். அமைச்சரவை பதவியில் உள்ளவர்கள் அந்த பதவியை துஷ்பிரயோகம் பண்ணுவதற்காக வாங்கக் கூடாதே தவிர மற்றபடி அவர்கள் சொந்த நிகழ்ச்சியில் வாங்கி கொள்ளலாம் என்பது தான் சட்டம். ஆனால் அண்ணாமலை ஒன்றை மட்டும் தனக்கு வசதியாக மறைத்து விட்டார்.

2014ல் வெறும் ரூ.214 கோடியாக இருந்த பாஜவின் ஒட்டுமொத்த சொத்து இன்று 2022ல் ரூ.5200 கோடிக்கு மேல்  உயர்ந்துள்ளது. ஏறத்தாழ 81 சதவீதம் கூடியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டோம் என்று கூறிவிட்டு, இந்த ரூ.5000 கோடி வருமானம் எப்படி வந்தது என்று அவர்களால் கணக்கு காட்ட முடியுமா. வருமானவரி விலக்கு மற்றும் கிப்ட் என்ற அடையாளத்தை உள்ளே சொருகி கொள்கின்றனர். வங்கியில் ரூ.2லட்சத்துக்கு மேல் போட முடியாது. எப்படி இந்த 6 ஆண்டுகளில் பாஜவுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது. இதற்கான விளக்கம் இருக்கிறதா. ஏனென்றால் அதானி, அம்பானி பெரும் பணக்காரர்கள் அரசு பணத்தை சுரண்டுவதற்கு, அரசு நிறுவனத்தை வாங்குவதற்கு சட்டப்படியாக பேரம் பேசிவிட்டு சட்ட விதிகளை மீறி, சட்டத்துக்கு உட்பட்டு பணம் கொடுப்பதாக பல ஆயிரம் கோடிகளை பாஜவுக்கு கொட்டி கொடுத்துள்ளனர்.

இப்படி கொல்லைப்புறத்தில் ஊழலை செய்து விட்டு, ‘நாங்கள் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று அண்ணாமலை சொல்வது மிகப் பெரிய விந்தையாக உள்ளது. மொய் விருந்தால் மக்களுக்கு நஷ்டம் என்று சொல்கிறார். ஆனால் அப்பகுதி மக்களில் யாரையாவது மொய் விருந்து கொடுங்கள் என்று கட்டாயப்படுத்தினார்களா. இதில் மொய் செய்தவர்களுக்கு திருப்பி அதே அளவுக்கு மொய் செய்வார்கள். இது சேமிப்பின் அடையாளம். அதை முறைப்படி வங்கியில் செலுத்தி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் செலுத்துகிறார்கள். இதில் எங்கு அண்ணாமலை குற்றம் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.

இன்றைக்கு டெல்லியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். கெஜ்ரிவாலும் சொல்லியிக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக ரூ.10ஆயிரம் கோடிக்கு மேல் பாஜக பயன்படுத்தி உள்ளதாக சொல்லியிருக்கிறார். இவர்களின் நடவடிக்கை இந்திய ஜனநாயத்துக்கு ஆபத்தான போக்காக உள்ளது. இது கள்ளப்பணமா, காந்தி கணக்கு பணமா என்பதற்கு அண்ணாமலை விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதன் நோக்கமே, நீங்கள் எனக்கு மொய் செய்தால், உங்கள் வீட்டில் எப்போது விசேஷம் வருகிறதோ அப்போது நான் திருப்பி செய்வேன் என்பது தான். இது அந்த பகுதியில் பழக்க வழக்கங்கள்.

ஆனால் அண்ணாமலைக்கோ, மக்களின் பழக்க வழக்கம் தெரியாமல், பண்பாடு தெரியாமல், இந்து வைதீக மரபு தெரியாமல் அவர் அரசியல் செய்வதற்கு இது தான் சாட்சி.அவர் ஒன்று செய்யலாம். பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, எப்படி பாஜவின் சொத்து மதிப்பு இத்தனை கோடி எப்படி உயர்ந்தது, 5ஜி ஏலத்தில் இத்தனை கோடி நஷ்டம் ஏற்பட்டது, 3 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக அம்பானி மாறினார் என்று அவரிடம் கேட்டு சொல்லட்டும். அப்படி செய்தால் உண்மையிலேயே அண்ணாமலையை பாராட்டலாம். இவ்வாறு அவர் கூறினார். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ.10ஆயிரம் கோடிக்கு மேல் பாஜ பயன்படுத்தி உள்ளதாக சொல்லியிருக்கிறார்.

Related Stories: