ஓய்எஸ்ஆர் காங்கிரசார் மோதல் நடுரோட்டில் அமர்ந்து சந்திரபாபு போராட்டம்: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, 2வது நாளாக தெலுங்கு தேசம் கட்சி பேனரை ஒய்எஸ்ஆர் காங்கிரசார் கிழித்ததை கண்டித்து, சந்திரபாபு நாயுடு தர்ணாவில் ஈடுபட்டார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டம், குப்பத்தில் நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கட்சி கொடி, பேனர் வைப்பதில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சந்திரபாபு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால், அதை தடுக்கும் வகையில் ஒய்எஸ்ஆர் கட்சியினர் பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர்.

மேலும், தெலுங்கு தேசம் கட்சி பேனர்களையும் கிழித்தனர். இதை தட்டி கேட்ட அக்கட்சியினர் மீதும் தாக்குதலும் நடத்தினர். இதை கேள்விப்பட்ட சந்திரபாபு நாயுடு, விருந்தினர் மாளிகையில் இருந்து பாத யாத்திரையாக குப்பம் பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்த பேனர்களை ஒய்எஸ்ஆர் காங்கிரசார் கிழித்தனர். இதை கண்டித்து சந்திரபாபு அங்கேயே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவர் பேசுகையில், ‘முதல்வர் ஜெகன் மோகன் ஒரு ரவுடி. இந்த தொகுதி எம்எல்ஏ.வாகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் நான் சுற்றுப் பயணம் செய்வதை தடுக்க, ரவுடித்தனம் செய்து  கலவரத்தை தூண்டுகிறார். இவற்றுக்கு எல்லாம் மக்கள் பதில் சொல்லும் காலம் சில மாதங்களில் வரும்,’ என்றார்.

Related Stories: