செல்போனில் அமைச்சருடன் மோதல் யாரா இருந்தா என்ன? இன்ஸ்பெக்டர் கெத்து: பேசி முடித்ததும் வந்தது இடமாற்றம்

திருவனந்தபுரம்: கேரள உணவுத்துறை அமைச்சர் அனிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். கேரளாவில் உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் அனில். சில தினங்களுக்கு முன்பு நெடுமங்காடு தொகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னையும், தனது குழந்தையையும் 2வது கணவர் துன்புறுத்துவதாக கூறி திருவனந்தபுரம் வட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் வட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிலாலை செல்போனில் அழைத்த அனில், பெண்ணின் புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். ‘யார் போன் செய்தாலும் கவலையில்லை. நியாயமாக என்ன செய்ய முடியுமோ? அதைதான் செய்ய முடியும்,’ என கிரிலால் தெரிவித்தார். அதைக் கேட்டு கோபமடைந்த அனில், ‘இந்நேரத்துக்கு பெண்ணின் கணவரை ஸ்டேஷனுக்கு தூக்கிக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘அப்படி எல்லாம் செய்ய முடியாது. பிரச்னை ஏற்பட்டால் என்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்,’ என்று கிரிலால் கூறியதும் வாக்குவாதம் முற்றியது. இது தொடர்பாக மேலிடத்தில் அனில் புகார் கூற, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கிரிலால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: