அரியானா, பஞ்சாப்பில் புதிய மருத்துவமனைகள் திறப்பு சுகாதார சேவைகள் மேம்பட்டால் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, சுகாதார சேவைகளை மேம்படுத்துவது  முக்கியம்,’ என்று பிரதமர் மோடி கூறினார். பஞ்சாப் மாநிலம், மொகாலி மாவட்டத்தில் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் டாடா நினைவு மையத்தால் ரூ.660 கோடி செலவில் ‘ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்’ கட்டப்பட்டுள்ளது. 300 படுக்கைகள் கொண்ட இது, அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் நவீன  வசதிகளை பெற்றுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் முதன்மையான முன்னுரிமைகளில் முழுமையான சுகாதாரப் பாதுகாப்பு இடம் பெற்றுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டுக்கு முன், நாட்டில் 400க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. தற்போது 200க்கும் மேற்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, அதன் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது முக்கியம். மக்கள் நவீன மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சைக்கான வசதிகளைப் பெறும்போது, ​​அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் அவர்களின் ஆற்றல் சரியான திசையில் செலுத்தப்படும்,’’ என்றார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் கலந்து கொண்டார். முன்னதாக அரியானா மாநிலம், பரிதாபாத்தில் ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அமிர்தா மருத்துவமனையையும் மோடி திறந்து வைத்தார், இதில், 2,600 படுக்கைகள் உள்ளன.

* ஷின்சோ இறுதிச் சடங்கில் பங்கேற்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய இறுதிச்சடங்கு அடுத்த  மாதம் 27ம் தேதி டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்வதாக ஜப்பான் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அப்போது, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவையும் அவர் சந்திக்க உள்ளார்.

Related Stories: