அரும்புலியூரில் ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் புகார் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், அரும்புலியூரில் இருந்து கரும்பாக்கம் வரும் ஏரி பாசனகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: உத்திரமேரூர் வட்டம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாக்கம் கிராமம். இக்கிராம விவசாய நிலங்களுக்கு அரும்புலியூர் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக ஏரிப்பாசன நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அரும்புலியூரை சேர்ந்த சில விவசாயிகள் தங்களுக்கு வசதியாக கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால், கடைமடைப் பகுதிக்கு ஏரிநீர் வந்து சேரவில்லை. இதுகுறித்து உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற எங்களிடம் பணம் இல்லை என தெரிவிக்கிறார்கள். இதனால், கரும்பாக்கம் விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயம் செய்ய வழிவகை செய்துதருமாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: