நடுரோட்டில் நிறுத்தப்படும் ஆட்டோ, ஆம்னி பஸ்களால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நெரிசல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தாம்பரம்: சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் தாம்பரம் பகுதியில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், திரையரங்குகள் என ஏராளமாக உள்ளன. விசேஷ நாட்கள், பண்டிகை காலங்களில் அனைத்து பொருட்களையும் வாங்க தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் தாம்பரம் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். தாம்பரம் பகுதியில் 3 திரையரங்குகள் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து திரையரங்குகளுக்கு ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வருபவர்கள், சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பள்ளி, கல்லூரிகளுக்கு, வேலைகளுக்கு என செல்ல தாம்பரம் பகுதியில் இருந்து பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் தான் தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் 24 மணி நேரமும் தாம்பரம் பகுதி பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், இங்குள்ள ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளை சாலையின் நடுவிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர்.

இதனால், பின்னால் வரும் வாகனங்கள் வரிசையாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட நேரம் நிற்பதால், தாம்பரம் பகுதியில் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், சொந்த ஊருக்கு செல்பவர்கள், அவசர தேவைகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அதேபோல், தாம்பரம் ரயில் நிலையம் அருகே, மேம்பாலம் முழுவதும் ஒருபுறம் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் தினமும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையோரம் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களை நிறுத்திவிடாமல் இருக்கவும், ஷேர் ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகளை சாலையின் நடுவே நிறுத்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘தாம்பரம் பகுதி மிக முக்கியமான பகுதி என்பதால் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

அங்கு போக்குவரத்து போலீசார் முறையாக பணிகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், அப்படியே பணியில் ஈடுபட்டாலும் ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதாலும் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் இருபுறமும், தாம்பரம் மேம்பாலத்திலும் ஆட்டோக்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் நிறுத்திவிடாமல் செய்தும் தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வழிசெய்யவேண்டும். இல்லையென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று தனியார் ஆம்னி பேருந்துகளை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ரயில் நிலையம் அருகே நிறுத்தாமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தபோ, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட பகுதியில் தாம்பரம் சட்ட மற்றும் ஒழுங்கு காவல்துறை போலீசாரை போக்குவரத்து போலீசாருக்கு பதில் பணியில் ஈடுபடுத்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்த விடாமல் போக்குவரத்து நெரிசலை குறைத்தது போல மீண்டும் அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

Related Stories: