நத்தம் பகுதியில் சீனி முருங்கை விளைச்சல் அமோகம்: உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை, கருத்தநாயக்கன்பட்டி, மாமரத்துப்பட்டி, களத்துப்பட்டி, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, நல்லபிச்சம்பட்டி, சித்திரைகவுண்டன்பட்டி ஆகிய கிராமப்பகுதிகள் மலைகள் சூழ்ந்த பகுதிகளாகும். இப்பகுதிகள் மானாவாரி நிலங்களாகவும், கற்கள் அதிகம் கொண்ட நிலப்பகுதியாகவும் முன்பு இருந்தது. நவீன இயந்திரங்களை பயன்படுத்தி, விளைநிலங்களில் பரவி கிடந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டு, மண்ணை பண்படுத்தி விவசாயம் செய்ய ஏற்ற பூமியாக விவசாயிகள் மாற்றியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து, இப்பகுதியில் கத்தரி, தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய், போன்ற காய்கறி வகைகள், செவ்வந்தி போன்ற மலர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சீனி முருங்கை என்னும் ஒட்டு ரக முருங்கை பயிரிட்டுள்ளனர். தற்போது முருங்கைக்காய்கள் நன்கு விளைந்து நல்ல விளைச்சல் கண்டுள்ளது. அவற்றை அறுவடை செய்து, தரம் பிரித்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கும், கல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி கூறுகையில், ‘‘கடந்தாண்டு பருவமழை நன்றாக பெய்ததையடுத்து மானாவாரி நிலங்களில் சீனி முருங்கை பயிரிட்டோம். தற்போது 1 கிலோ ரூ.20க்கு விலை போகிறது.  கல்கத்தாவிற்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்புகிறோம். நல்ல லாபம் கிடைத்து வருகிறது’’ என்றார்.

Related Stories: