ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30.5 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது.

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.   

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், நடு வரிசை பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா 35 ரன்களும், 10 ஆம் நிலை வீரராக களமிறங்கிய ரிச்சர்டு என்கிராவா 34 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவனும், சுப்மன் கில்லும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

ஷிகர் தவன் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த அபார வெற்றியின் மூலம் ந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Related Stories: