பாரத மாதா கோயில் பூட்டை உடைத்த விவகாரம் பாஜ துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது

ராசிபுரம்: தர்மபுரி அருகே பாரதமாதா கோயிலின் பூட்டை அடித்து உடைத்த விவகாரத்தில், பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுதப்பெருவிழா பாத யாத்திரையை, பாஜ மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியில் பங்கேற்ற பாஜவினர், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் வரை சென்றனர். அப்போது, சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரதமாதா கோயிலில் மாலை அணிவிக்க, பாஜவினர் முயன்றனர். ஆனால், கதவுகள் பூட்டியிருந்ததால், அங்கு பணியாற்றும் கண்காணிப்பாளரிடம், கதவை திறக்கும்படி வலியுறுத்தினர்.

ஆனால், அதிகாரியின் உத்தரவின் பேரில் மட்டுமே திறக்கப்படும் என அவர் கூறியதால், ஆத்திரமடைந்த பாஜ துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் கட்சியினர், பூட்டை கல்லால் அடித்து உடைத்தனர். பின்னர், பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்துச் சென்றனர். இந்நிலையில், அத்துமீறி பாரத மாதாவின் கோயில் பூட்டை உடைத்ததாக எழுந்த புகாரின்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, நேற்று, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டிக்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார், ராசிபுரம் போலீசாரின் உதவியுடன் கே.பி.ராமலிங்கத்தை, அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

Related Stories: