பாகிஸ்தானுடன் போர் பயிற்சியா? இலங்கை அரசு மறுப்பு

கொழும்பு: இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் போர் கப்பலுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை என இந்தியாவின் புகாருக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாதான் அதற்கு அதிகளவில் உதவிகள் செய்து வருகிறது. இருப்பினும், அதன் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் உளவு கப்பலான‘யுவான் வாங்-5’ஐ, அம்பந்தொட்ட துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. முதலில் இதற்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, சீனாவின் எச்சரிக்கையால் இந்த அனுமதியை அளித்துள்ளது.

இதனிடையே, சீனாவால் கட்டப்பட்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள ‘பிஎன்எஸ் தைமூர்’என்ற போர்க்கப்பல், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தது. இக்கப்பலை சட்டோகிராம் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு வங்கதேச அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுகம் வந்துள்ளது. இந்த கப்பலுடன் இணைந்து இலங்கை கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.

இதற்கு நேற்று மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசு, பாகிஸ்தான் போர் கப்பலுடன் இலங்கை கடற்படை கப்பல் எதுவும் போர் பயிற்சியில் ஈடுபடவில்லை என கூறியது. அதே நேரம், போரின் போது அல்லது பேரிடர் காலத்தின் போது மனிதாபிமான உதவிக்காக கடற்படைகளின் ஒத்துழைப்பு, தொடர்பு கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடும் என தெரிவித்துள்ளது.

Related Stories: