நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி குந்தா, அவலாஞ்சி உள்பட 8 அணைகள் திறப்பு

மஞ்சூர்:  மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து நேற்று மாலை அணை திறந்துவிடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் 13 நீர்மின் நிலையங்கள் உள்ளது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் இந்த நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குந்தா-60 மெகாவாட், கெத்தை-175, பரளி-180, பில்லுார்-100, அவலாஞ்சி-40, காட்டுகுப்பை-30, சிங்காரா-150, பைக்காரா-59.2, பைக்காராமைக்ரோ-2, முக்குருத்தி மைக்ரோ-0.70, மாயார்-36, மரவகண்டி-0.75, என மொத்தம் 833.65, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி, அப்பர்பவானி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து கடந்த 8ம் தேதி இரவு திறந்து விடப்பட்டு 3வது நாளாக நேற்றும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழையால் அவலாஞ்சி அணைக்கும் நீர் வரத்து பல மடங்கு அதிகரித்ததை தொடர்ந்து அணையின் நீர் மட்டம் மள, மளவென உயர்ந்தது. இதை தொடர்ந்து அணையின் நீர் வரத்து குறித்து மின்வாரிய அதிகாரிகள் நேற்று காலை முதலே தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் அணை முழு கொள்ளளவான 171 அடியை எட்டியது. இதை தொடர்ந்து மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் குந்தா தாசில்தார் இந்திரா முன்னிலையில் அவலாஞ்சி அணை திறந்து விடப்பட்டது. தற்போது அணையின் இரு மதகுகளும் 3இஞ்ச் வரை மட்டுமே தூக்கப்பட்டு அதன் வழியாக வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவலாஞ்சி அணை திறக்கப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவே கரையோர பகுதிகளில் வசித்து வந்த சுமார் 20 குடும்பங்கள் பாதுகாப்பு கருதி தக்கர் பாபாநகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இதில் குந்தா, அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கன், மரவகண்டி, சாண்டிநல்லா, முக்குறுத்தி மற்றும் பில்லூர் அணைகள் உள்ளிட்ட 8 அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குந்தா புனல் மின் வட்டத்திற்குட்பட்ட அவலாஞ்சி, குந்தா, பில்லுார் அணைகளில் வெளியேற்றப்படும் நீர் பவானி ஆற்றில் கலந்து பவானிசாகர் அணையை அடையும். இதேபோல் முக்குறுத்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மரவகண்டி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மோயார் ஆற்றில் கலந்து பவானிசாகர் அணையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: