வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தென்காசி வழியாக இரு சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தென்காசி வழியாக இரு சிறப்பு ரயில்கள் வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா வரும் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை நடக்க உள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையும் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இவ்விரு பண்டிகைகளுக்கும் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் தெற்கு ரயில்வே கேரளாவில் இருந்து நெல்லை மற்றும் தென்காசி மார்க்கங்களில் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி ஒரு சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்கும், மற்றொரு ரயில் எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கும் இயக்கப்பட உள்ளது.

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு வரும் 17,24, 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில்(புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் டவுன், மதுரை, திருச்சிராப்பள்ளி வழியாக சிறப்பு ரயில் வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் பிற்பகல் 3.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும். நெல்லைக்கு 6.20 மணிக்கு வந்து புறப்பட்டு செல்லும். வேளாங்கண்ணிக்கு மறுதினம் வியாழன் காலை 4 மணிக்கு போய் சேரும். மறுமார்க்கத்தில் வரும் 18, 25, மற்றும் செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில்(வியாழக்கிழமை) இரவு 11:50 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு காலை 9.55 மணிக்கு வந்து சேரும். இங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு பகல் 1 மணிக்கு போய் சேரும். இந்த ரயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மற்றுமொரு ரயில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி( எண்.06039) இடையே வரும் 15ம் தேதி சுதந்திர தினம் முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை திங்கள் கிழமை தோறும் இயக்கப்பட உள்ளது. எர்ணாகுளத்தில் பிற்பகல் 2:30  புறப்பட்டு தென்காசிக்கு இரவு 9:45 மணிக்கு வந்து சேரும். வேளாங்கண்ணி மறுநாள் செவ்வாய்கிழமை காலை 8:15 மணிக்கு  சென்றடையும். மறுமார்க்கத்தில் வரும் 16ம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை செவ்வாய்தோறும் (வண்டி எண்-06040) வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரயில் வேளாங்கண்ணியில் மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு தென்காசிக்கு மறுநாள் புதன்கிழமை காலை 3.50 மணிக்கு வந்து சேரும். எர்ணாகுளத்தில் பகல் 12 மணிக்கு சென்றடையும்.

 இந்த ரயிலில் 2 அடுக்கு ஏசி பெட்டிகள் ஒன்றும், 3 அடுக்கு AC பெட்டிகள் 2ம், இரண்டாம் வகுப்பு  படுக்கை வசதி பெட்டிகள் 7ம், பொதுப்பெட்டிகள் 2ம், கார்டு பெட்டிகள் 2 என மொத்தம் 14 பெட்டிகள் இடம்பெறும். இந்த சிறப்பு ரயில் எர்ணாகுளம், கோட்டயம், செங்கனாசேரி, திருவல்லா, செங்கணூர், மாவேலிக்கரை, காயன்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தன்கோட்டா, குந்தரா, கொட்டாரக்கரை, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலயங்களிலில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது.

Related Stories: