விற்பனையாகாததால் வேதனை சாலையில் டன் கணக்கில் தக்காளியை வீசிய விவசாயிகள்

திருமலை: சந்தையில் தக்காளி விற்பனையாகாததால் அவற்றை விவசாயிகள் சாலையோரம் குவியல், குவியலாக கொட்டினர். இது டன் கணக்கில் இருக்கும் என தெரிகிறது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு, சிங்கனமலை, கல்யாணதுர்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தக்காளி சாகுபடி நடந்து வருகிறது. ஆனால் தற்போது தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதை பறிப்பதற்கான கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் ராப்தாடு, கல்யாணதுர்கம், கம்பத்தூர், பேரூர், கனகனப்பள்ளி மண்டலங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று தக்காளிகளை சந்தையில் விற்க எடுத்து வந்தனர். மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவும் சரியாக விற்பனையாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த விவசாயிகள், டன் கணக்கில் தக்காளியை நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டி விட்டு சென்றனர்.

கடந்த மாதம் ஒரு குவிண்டால் தக்காளி ரூ.1000க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.300 கூட கிடைக்கவில்லை. உற்பத்தி அதிகமானதால் தக்காளியை குறைந்த விலைக்கு கொடுத்தாலும் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே ஆந்திர அரசு உறுதியளித்தபடி உணவு பதப்படுத்தும் பிரிவு தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: