இலவசத்துக்கு தடை கோரும் வழக்கை எதிர்த்து ஆம் ஆத்மி மனு; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: தேர்தல் இலவசங்களுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த பொதுநலன் வழக்கை கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது, ‘இலவசங்கள் வழங்குவது பற்றி எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், நிதி குழு சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தங்களின் ஆலோசனைகளை வழங்க ேவண்டும்,’ என உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவில், ‘ஏழைகளுக்கு உதவ தான், இலவச மின்சாரம், பேருந்து பயணம், குடிநீர் உள்ளிட்ட வாக்குறுதிகளை கட்சிகள் வழங்குகின்றன. ஏழைகளுக்கு உதவும் திட்டங்கள் குறித்து, நீதிமன்ற அறைக்குள் விவாதம் நடத்தும் அளவிற்கு மோசமான சூழல் இந்தியாவில் வந்து விட்டது வேதனையாக உள்ளது. இந்த விவகாரம் பற்றி ஆராய, உச்ச நீதிமன்றம் குழு அமைத்தால், அதில் அனைத்து மாநில அரசுகள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேச பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்’ என கோரியுள்ளது.

Related Stories: