தகவல் சட்டத்தில் கேள்வி கேட்க 10 பேருக்கு வாழ்நாள் தடை: ஆணையத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

காந்திநகர்: குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பெத்தாபூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை அமிதா மிஸ்ரா என்பவர் தனது சம்பள விவரங்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி சில கேள்விகளை கேட்டார். இதேபோல், மொடாசா நகரில் உள்ள கஸ்பாவைச் சேர்ந்த பள்ளி ஊழியரான சத்தார் மஜித் கலீஃபா, தனது நிறுவனம் தன்மீது எடுத்த நடவடிக்கைகளுக்காக தகவல் சட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

மேலும் பாவ்நகரைச் சேர்ந்த சிந்தன் மக்வானா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 10 பேர் சொந்த காரணங்களுக்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், தகவல் சட்டத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு அமிதா மிஸ்ரா, மஜித் கலீபா, சிந்தன் மக்வானா உள்ளிட்ட 10 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குஜராத் தகவல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்த 18 மாதங்களில் அரசு அதிகாரிகளை துன்புறுத்துவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறுதலாக பயன்படுத்திய புகாரின் அடிப்படையில் 10 ேபருக்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவர்கள் தகவல் சட்டத்தில் இனிமேல் கேள்விகள் கேட்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: