வெங்கையா நாயுடு பதவிக்காலத்தில் மாநிலங்களவை செயல்பாடு புதிய உச்சத்தை தொட்டது; பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: ‘துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி காலத்தில் மாநிலங்களவை செயல்பாடுகள் புதிய உச்சத்தை தொட்டது’என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளை முடிவுக்கு வருகிறது. இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ஜெகதீப் தன்கர் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா  நேற்று நடந்தது. இதையொட்டி மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘நான் வெங்கையா நாயுடுவிடம் மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறேன்.  பல பொறுப்புகளையும் வகித்துள்ளார். அத்தனை பதவிகளையும் முழு அர்ப்பணிப்புடன் செய்தார்.

நாடு இப்போது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், பிரதமர் என அனைவருமே சுதந்திரத்திற்குப் பின்னர் பிறந்தவர்கள். ஒவ்வொரு நபருமே எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். வெங்கையா நாயுடு மாநிலங்களவை செயல்பாட்டு நேரத்தை அதிகரித்துள்ளார். இதனால், அவை நடவடிக்கைகள் அதிக நேரம் நடந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மாநிலங்களவை செயல்பாடுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.  மாநிலங்களவை உற்பத்தி திறன் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. உறுப்பினர்களின் வருகையும் அதிகரித்தது. இந்த 5 ஆண்டுகளில் அவையில் 177 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன அல்லது விவாதிக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகள் மீது கொண்ட ஆர்வம் அவரது செயல்பாடுகளில் வெளிப்படும். அவர் அவையை நடத்தும் விதம் தனிச்சிறப்பாகும்’’என்றார்.

Related Stories: