பார்னெல் அபார பந்துவீச்சு தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

பிரிஸ்டல்: அயர்லாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், 44 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா, முதலில் அயர்லாந்துக்கு எதிராக  2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்கா 20 ஓவர்  முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. அந்த அணியின் ஹெண்ட்ரிக்ஸ் 42, கிளாஸன் 39, கேப்டன் டேவிட் மில்லர் 32* ரன் விளாசினர்.  

அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 18.5 ஓவரில் 138 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 34, மெக்கார்த்தி 32, கேப்டன் பால் ஸ்டர்லிங் 28 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பார்னெல் 4 ஓவரில் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் அள்ளினார். பிரிடோரியஸ் 3, என்ஜிடி, ஷம்சி தலா 1 விக்கெட் எடுத்தனர். 44 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. பார்னெல் ஆட்ட நாயகன் விருதும், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories: