24 நாட்கள் தடைக்கு பின்னர் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வி.கே.புரம்: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு அருவிகள் உள்ளன. இதில் சீசன் காலங்களில் மட்டுமே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழும். இதுபோல் மழைக்காலங்களில் மட்டுமே களக்காடு பகுதி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும். ஆனால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் மட்டும்தான் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குளித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் பாபநாசம் மலைப்பகுதியில் சாலை பணிகள் காரணமாக கடந்த 12ம்தேதி முதல் 20ம்தேதி வரை பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து  காரையாறு சொரிமுத்தைய்யனார் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12ம்தேதி முதல் நேற்று (ஆக.5) வரை  அருவிகள் மற்றும் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 24 நாட்களுக்குபின் பாபநாசம் அகஸ்தியர் அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று(ஆக.6) காலை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலின்றி ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.

Related Stories: