புதுச்சேரியில் 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் விவகாரம்: அமைச்சர் துணையோடு கடத்தப்படுவதாக புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து, விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் போலியான ஆவணங்களை சமர்பித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி ஊசத்திட்டேரி பகுதியில் அதிரடிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, லாரியில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி ஓட்டுனர்கள் மற்றும் லாரியில் வந்த 3 பேரை பிடித்து அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து, வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அடுத்தகட்ட விசாரணைக்காக உணவுகடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது கோழி தீவனத்திற்காக வீணாகிப்போன ரேஷன் அரிசியை திருவாண்டார்கோயிலில் உள்ள இந்திய உணவு கழக குடோனிலிருந்து வாங்கி வருவதாக கூறியதால் 9டன் ரேஷன் அரிசி விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருவாண்டார் கோயிலில் இருந்து 9டன் ரேஷன் அரிசி ஏற்றப்படவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. மாறாக முத்தியால்பேட்டை சோலைநகரில் உள்ள ரேஷன் கடையில் இருந்து ரேஷன் அரிசி லாரியில் ஏற்றப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பழைய ஆவணங்களை திருத்தி திருவாண்டார் கோயிலில் உள்ள இந்திய உணவு பாதுகாப்பு கழக குடோனில் இருந்து ரேஷன் அரிசியை  எடுத்துவந்ததாக ஏமாற்றி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. வீணான ரேஷன் அரிசி எனக் கூறப்படும் நிலையில் அரிசி மூட்டைகள் அனைத்தும் பிரிக்கப்படாமல் இருந்தது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.    

Related Stories: