மாநில ஆணையம் தலையீட்டால் நடவடிக்கை பழங்குடியினர் 2 பேருக்கு சாதிச்சான்றிதழ் 4 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினர் செயலர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் கடந்த மார்ச் 9ம் தேதி ஜெயக்குமார் என்பவர், தாம் உரிய சான்றிதழ்களுடன் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடம் தமது இரு பிள்ளைகளுக்கும் பழங்குடி இனச்சான்று கோரி  விண்ணப்பித்திருந்தும் 4 ஆண்டுகளாக சான்றிதழ் வழங்கவில்லை, என புகார் அளித்திருந்தார். மனுதாரர் தனது சாதிச் சான்றிதழ்களுடன் இவரது தந்தை மற்றும் இவருடன் பிறந்தவர்களின் சாதிச் சான்றிதழ் நகல்களையும் இணைத்துத் தான் தமது பிள்ளைகளுக்கு சான்று வழங்குமாறு கோரியிருந்தார். ஆனாலும் சான்று வழங்கப்படாததால் நேரில் சென்று  கேட்டபோது,  இவருடைய கோப்பு காணாமல் போய்விட்டதாக தெரிவித்தனர். மீண்டும் 23.8.2021 அன்று இ சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்தும், சாதிச் சான்றிதழ் மட்டும் வழங்கப்படவில்லை.

எனவே, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்ப்பு  நாளன்று (15.11.2021) ஆட்சியரிடம் மனு அளித்த மனுவும், பூர்வீக மாவட்டத்தில்தான் அவர் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி நிராகரிக்கப்பட்டு விட்டது. எனவே,  4வது முறையாக  மூலம் தென்மண்டல வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார். அப்போது, அவருடைய ஆதார் முகவரியில் திருவள்ளூர் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால் அது மீண்டும் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடமே சென்றது. இதனால் அவர் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியரிடம் மீண்டும் நேரில் சென்று மனு அளித்தபோது அவர் அதை வாங்க மறுத்து விட்டார். அதன்பிறகு மனுவை பதிவஞ்சல் மூலம் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தார்.

இருப்பினும் அவருக்கு முறையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இறுதியாக மனுதாரர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தை நாடினார். மனுதாரரை நேரில் விசாரித்த ஆணையம்,  இரு வருவாய் கோட்டாட்சியரிடமும் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பி விரைவில் மனுதாரருக்கு இனச்சான்றிதழ் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் கடந்த மே 30ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, கடந்த ஜூன் 10ம் தேதி மனுதாரரின் இரண்டு பிள்ளைகளுக்கும் (சிறீஜா மற்றும் ஹரீஷ்வர்) திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் மூலம் பழங்குடி சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: