இன்று சிறப்பு அந்தஸ்து ரத்தான நாள்; கையெறி குண்டுவீசி தொழிலாளி கொலை: புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு

ஜம்மு: இன்று ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தான நாள் என்ற நிலையில், தீவிரவாதிகளின் கையெறி குண்டு வீச்சு சம்பவத்தில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். அதனால் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது  சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது.  இன்றைய தினம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாள் என்பதால், ஜம்மு -  காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று புல்வாமாவில், காஷ்மீர் அல்லாத மக்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியதால், தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.

மேலும் இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ‘தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட தொழிலாளி பீகார் மாநிலம் சக்வா பர்சா பகுதியை சேர்ந்தவர் ஆவார். ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாள் என்பதால், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். காயமடைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புல்வாமா பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: