திருவாடானை ஒன்றியத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிக அளவில் திருவாடானை ஒன்றியத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. அதனுடன் இணைந்த தொழிலாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்ற உப தொழில்களை விவசாயிகள் செய்து வருகின்றனர். இதனால் குடும்ப செலவிற்கு தேவையான பணத்தை இந்த தொழில்கள் மூலம் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.

இப்பகுதியில் கறவை மாடு, வெள்ளாடு வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்பு என சுமார் 50,000 கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஓரளவு லாபம் கிடைக்கும் தொழிலாக இருந்த போதிலும் கோடை காலத்தில் கடுமையான வெயில் தாக்கத்தால் பல நேரங்களில் கால்நடைகள் செத்து மடிகின்றன. அதேபோன்று மழைக்காலங்களிலும் நோய் தாக்குதலால் கால்நடைகள் இறக்கின்றன. பெரிய லாபம் கிடைக்க வேண்டிய இத்தொழிலில் இது போன்ற சமயங்களில் குறைந்த லாபமோ அல்லது நஷ்டமோ ஏற்படுகிறது. சில சமயங்களில் கால்நடையை தாக்கும் நோய் என்னவென்று தெரியாமல் சிகிச்சை அளித்தாலும் பலனின்றி இறந்து விடுகின்றன.

ஆயிரக்கணக்கான கால்நடைகள் இருக்கும் இப்பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் கால்நடை மருத்துவமனை உள்ளது. கால்நடைகளை தாக்கும் வழக்கமான நோய்களை தவிர புதுப்புது நோய்களாலும் கால்நடை இறப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக செம்மறி ஆடுகளும், பசு மாடுகளும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே அதிக கால்நடை வளர்க்கப்படும் திருவாடானை ஒன்றிய பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: