உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை... முத்தலாக் முறை சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியவர்!!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமிக்க தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். தலைமை நீதிபதியாக இருந்த எஸ்ஏ.போப்டே ஓய்வுக்குப்பின் என்.வி.ரமணா கடந்த 2021, ஏப்ரல் 24ம் தேதி தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இவர் ஆகஸ்ட் 26ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை நீதிபதி அலுவலகத்துக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். மரபுப்படி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ள மூத்த நீதிபதி, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.

அதன்படி நீதிபதி யு.யு. லலித் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்று பரிந்துரைத்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட யு.யு லலித்தின் பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். ஏனெனில் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் யு.யு. லலித் ஓய்வு பெற உள்ளார். யு.யு.லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக உயரந்த 2வது நீதிபதி என்ற பெருமையைப் பெறுவார். முத்தலாக் முறை சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கியது, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கியதும் யுயு லலித் அமர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: