ஈரோட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு 2047ல் உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கும்

ஈரோடு: உலக நாடுகளுக்கு இந்தியா 2047ல் தலைமை வகிக்கும் என ஈரோட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை மணி மண்டபத்தில் அவரது 217-வது நினைவு தினம் நேற்று அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, ஜெயராமபுரத்தில் நடந்த தீரன்சின்னமலையின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஆங்கில ராணுவத்தை எதிர்த்து, இளைஞர்களை ஒருங்கிணைத்து, உள்ளூர் ஆயுதங்களைக் கொண்டு, தனது போர் தந்திரத்தால், ஆங்கிலப்படைகளை தீரன் சின்னமலை தோற்கடித்தார். அவரது தலைமை பண்பு குறித்து பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 2047ல், உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்கும். தீரன் சின்னமலையின் கனவுப்படி, பொருளாதார வளம், ராணுவ பலம், அறிவுசார் வளர்ச்சி பெற்ற, தர்மத்தை காக்கும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* தமிழில் பேசினார்

கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சை தொடங்கும்போது, ``தமிழ் மிகவும் பழமையான மொழி, அழகான மொழி, சக்தி வாய்ந்த மொழி. தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பம். நான் உறுதியாக நம்புகிறேன், உங்களை போல ஒரு நாள் தமிழ் பேசுவேன்” என்று தமிழில் கூறினார்.

Related Stories: