நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர அமுத பெருவிழாவுக்கு தயாராகிறது மின்விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கும் வேலூர் கோட்டை-அலங்கரிக்கும் பணியில் தொல்லியல்துறை தீவிரம்

வேலூர் : நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர அமுத பெருவிழாவை எதிர்கொள்ள வேலூர் கோட்டையை தயார்படுத்தும் பணியில் தொல்லியல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட இந்தியா, தனது 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை எதிர்கொள்கிறது. இதனை சுதந்திர அமுத பெருவிழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்கவிடலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்காக தேசிய கொடி தொடர்பான விதிகளிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது. மேலும் ஓராண்டு காலத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய ரயில் நிலையங்களில் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலும் கடந்த மாதம் அந்நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின அமுத பெருவிழாவை எதிர்கொள்ளும் வகையில் வேலூர் கோட்டையை இரவிலும் ஒளிர செய்யும் வகையில் அகழி நீரில் பட்டு பிரதிபலிக்கும் வகையில் அலங்கார மின்விளக்குகளை பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.

இப்பணியுடன் கோட்டை பூங்காவின் பாதுகாப்பு இரும்பு வேலி மீது ஏறி பொதுமக்கள் உள்ளே குதிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதன் உயரத்தை அதிகரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக மத்திய தொல்லியல்துறையின் கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் ராமராவிடம் கேட்டபோது, ‘சுதந்திர அமுத பெருவிழாவுக்காக மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அன்றைய தினம் கோட்டை ஜொலிக்கும்’ என்றார்.

Related Stories: