அன்புச்செழியன் உள்பட 5 சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை: சென்னை, மதுரை, வேலூரில் அதிரடி

சென்னை: போலி கணக்கு மூலம் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்து குற்றச்சாட்டை தொடர்ந்து சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, டி.ஜி. தியாகராஜன், சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ள சென்னை, மதுரை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமா துறையில் அசைக்க முடியாத பைனான்சியராக மதுரையை சேர்ந்த தொழிலதிபர் அன்புசெழியன் உள்ளார். அத்துடன் அவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.

அதோடு இல்லாமல் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் பைனான்ஸ் செய்து வருகிறார் அன்புசெழியன். அதிமுக மூத்த நிர்வாகிகளின் விசுவாசியான அன்புச்செழியன், கடந்த 10 ஆண்டுகளாக, அதிமுக ஆட்சியில் சினிமா மற்றும் பைனான்ஸ் துறையில் அசைக்க முடியாத நபராக வளர்ந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்த பிகில் திரைப்படத்தை ஏஜிஎஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் இயக்கியது. பிகில் திரைப்படம் தயாரிக்க முழு பணத்தையும் தொழிலதிபர் அன்புசெழியன் தான் இந்த நிறுவனத்துக்கு கொடுத்தார். ஆனால், பிகில் திரைப்படத்தின் வருமான வரிக்கணக்கை முறையாக ஒன்றிய அரசுக்கு கணக்கு காட்டாமல் பல நூறு கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், 2020ம் ஆண்டு சினிமா பைனான்சியர் அன்புசெழியன், அவர் நடத்தும் கோபுரம் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், அன்புசெழியன் வீடு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்த போது, ₹300 கோடிக்கு ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தாகவும், கணக்கில் வராத ₹77 கோடி ரொக்கம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்கிடையே, நடிகர் கமல் நடித்து வெளியான ‘விக்ரம்2’ மற்றும் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படத்துக்கு அன்புச்செழியன் தான் முழு பணம் பைனான்ஸ் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பல கோடி ரூபாய் பணம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவரது நண்பர்களான பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு, எஸ்.ஆர். பிரபு, ஞானவேல்ராஜா, டி.ஜி.தியாகராஜன், சீனிவாசனுக்கு சொந்தமான வீடுகள், சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை தி.நகர் ராகவையா சாலையில் வீடு, அதே சாலையில் அமைந்துள்ள கோபுரம் பிலிம்ஸ் நிறுவன அலுவலகம், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புசெழியன் சகோதரர் அழகர்சாமி வீடு, மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்புசெழியன் பங்களா வீடு, தெற்கு மாசி வீதியில் உள்ள அவரது பைனான்ஸ் அலுவலகம், செல்லூரில் உள்ள அவரது கோபுரம் பிலிம்ஸ் நிறுவன அலுவலகம், மதுரையில் உள்ள திரையரங்கம் என அன்புசெழியனுக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

இந்த சோதனையில் கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய காலாண்டில் அன்புசெழியன் பைனான்ஸ் நிறுவனம், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த கணக்குகளை வைத்து, கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் வரவு செலவு கணக்குகள், பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து எந்தெந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு கோடி ரொக்கமாக வழங்கப்பட்டது. அதற்கான கணக்குகள், கடன் கொடுத்த பணத்திற்கான வரவுகள் குறித்த விபரங்கள் ஒப்பீடு செய்யப்பட்டது. மேலும், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த கணினி, ஹாட் டிஸ்க்கள், பென்டிரைவ், பல்வேறு வங்கிகளின் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்தனர்.

அன்புசெழியனுக்கு சொந்தமான மதுரை மற்றும் சென்னையில் உள்ள பைனான்ஸ் நிறுவன அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, பிரபல சினிமா தயாரிப்பாளர்களான கலைபுலி எஸ்.தாணு, நடிகர் சூர்யாவின் உறவினர் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்திய ஜோதி பிலிம்ஸ் உரிமையாளரும் தயாரிப்பாளருமான டி.ஜி.தியாகராஜன், வேலூரை சேர்ந்த வட ஆற்காடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், எஸ்.பிலிம்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சீனிவாசன் உட்பட 6 சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டூடியோ கிரீன்’ தயாரிப்பு நிறுவனம் என இரண்டு பேரின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், ராயப்பேட்டை அவ்வைசண்முகம் சாலையில் உள்ள அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படம் தயாரித்த பிரபல சினிமா தயாரிப்பாளர் நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளரும் சினிமா தயாரிப்பாளருமான டி.ஜி.தியாகராஜன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர எஸ்.பிலிம்ஸ் சினிமா தயாரிப்பாளர் சீனிவாசனுக்கு சொந்தமான வேலூரில் உள்ள அலுவலகம், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரங்கள் எடுத்து சென்று கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணத்தை இரவு முழுவதும் எண்ணப்பட்டது.

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் உட்பட சினிமா தயாரிப்பாளர்கள் 6 பேர் வீடுகள், அலுவலகங்கள், பைனான்ஸ் நிறுவனங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் ₹13 கோடிக்கு மேல் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் சோதனை முடிவிற்கு பிறகு தான் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துக்கள் குறித்து முழுமையாக தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக பணம் புழக்கம் உள்ள சினிமா துறையில் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பார்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது சினிமா வட்டாரத்தில் முதலீடு செய்தோர் மற்றும் நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: