குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

சென்னை: குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் நீடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞரின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாததால் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இதனிடையே குவைத் தீவிபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்; குவைத்தில் மங்காப் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அங்கு உள்ள தமிழ்ச் சங்கம் மூலம் தெரிய வருகிறது. குவைத்தில் தீ விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குவைத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்
இதனிடையே குவைத் தீவிபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளச் செய்தியில், “குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: