நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. நீட் தேர்வு குளறுபடியால் நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்பில் சேர நீட் எழுதியவர்களில் 31% பேர்தான் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றனர். 2024ல் மட்டும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை.

ஒரு கேள்வி விட்டிருந்தால் 716 மதிப்பெண் கிடைத்திருக்கும், ஒரு கேள்வியை தவறாக எழுதியிருந்தால் 715 மதிப்பெண் கிடைக்கும். நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கி குளறுபடி நடந்துள்ளது. கடும் எதிர்ப்பை அடுத்து 1523 பேருக்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்ணை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தரவில்லை.

சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான தீர்ப்பை நீட் தேர்வுக்கு பொருந்திப்பார்ப்பது சரியல்ல. சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது, நீட் தேர்வு நேரடி தேர்வு. சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு தீர்ப்பு நீட் தேர்வுக்கு பொருந்தாது. நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க முடிவு எடுத்தபோது யாரிடம் அனுமதி பெற்றீர்கள்? லட்சக்கணக்கான மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருப்பது தேசிய தேர்வு முகமை.

நேரப் பற்றாக்குறையால் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் தமிழகத்தில் நீட் தேர்வு அமலுக்கு வந்தது. கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை. நீட் தேர்வு முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும். நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக் கனியாக மாறிவிட்டது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

The post நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: