அலகாபாத், ராஜஸ்தான், மும்பைக்கு அடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் 5.63 லட்சம் வழக்கு நிலுவை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: அலகாபாத், ராஜஸ்தான், மும்பைக்கு அடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் 5.63 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 59,57,454 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியா ராஜஸ்தானில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும், மும்பை உயர்நீதிமன்றத்தில் 5.9 லட்சம் வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 5,63,595 வழக்குகளும், பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தில் 4.5 லட்சம் வழக்குகள் என்ற வரிசையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறாக நிலுவையில் உள்ள வழக்குகள் அந்தந்த நீதிமன்றங்களின் எல்லைக்கு உட்பட்டவை. அவற்றை தீர்ப்பதில் அரசுக்கு நேரடிப் பங்கு இல்லை.

அதேநேரம் பிரிவு 21ன்படி வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகளில் 4 பெண் நீதிபதிகள் உள்ளனர். உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,108 நீதிபதிகளில் 96 பெண் நீதிபதிகள் உள்ளனர். மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, பாட்னா, உத்தரகண்ட் ஆகிய ஐந்து உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை’ என்றார்.

Related Stories: