காஞ்சிபுரத்தில் குடிநீர், கழிவறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத பழைய ரயில் நிலையத்தின் அவலம் நிர்வாகம் புறக்கணிப்பதாக பயணிகள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பழைய ரயில் நிறுத்தத்தில் குடிநீர், கழிவறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், 60 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் நிலையத்தை ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் புதிய ரயில் நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான பயணிகள் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழைய ரயில் நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால்,  இந்த ரயில் நிலையத்தில் நாளுக்குநாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது. இங்கு, சென்னையிலிருந்து திருமால்பூர் வரை பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, வாரத்தில் 4 நாட்கள் தென் மாவட்டங்களுக்கும் திருப்பதிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மாவட்ட தலைநகரமான காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையில் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு பணிகளுக்கும் தனியார் நிறுவனத்திற்கும் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள், பெரும்பாலும் மின்சார ரயிலில்தான் பயணம் செய்கின்றனர். காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பழைய ரயில் நிலையத்தை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான அடிப்படை வசதிகள் குறைந்துகொண்டே வருகின்றன. குடிநீர் வசதி இல்லை. இருக்கைகள் உடைந்த நிலையில் கிடக்கின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துபோகும் இந்த ரயில் நிலையத்தில் இரண்டு கழிவறைகள் மட்டுமே இருக்கின்றன. அதுவும் இருக்கு ஆனா இல்லை என்கிற கதையாக  எப்போதும் திறக்கப்படுவதில்லை. இதனால், மாலையில் பணிக்கு சென்று திரும்பும் பெண் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

 இந்த ரயில் நிலையத்தை முழுமையாக மூடும் பணியில் தெற்கு ரயில்வே முயற்சி மேற்கொண்டு பயணிகளின் கடும் எதிர்ப்பால்  மூடுவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இந்தப் பழைய ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது என ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளையாவது செய்து தரவேண்டும் பயணிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Related Stories: