பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 3வது தங்கம்: அச்சிந்தா அமர்க்களம்

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் பளுதூக்குதல் 73 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட அச்சிந்தா (20 வயது) ஸ்நேட்ச் முறையில் 143 கிலோ மற்றும் கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 170 கிலோ என மொத்தம் 313 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்தார். மலேசியாவின் ஹிதாயத் முகமது 303 கிலோ எடை தூக்கி (138 கி. + 165 கி.) வெள்ளிப் பதக்கமும், கனடா வீரர் ஷாத் டார்சைனி 298 கிலோ எடை தூக்கி (135 கி. + 163 கி.) வெண்கலப் பதக்கமும் வென்றனர். பளுதூக்குதலில் ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றிருந்த நிலையில், இந்தியாவுக்கு 3வது தங்கப் பதக்கமும் பளுதூக்குதலிலேயே கிடைத்துள்ளது. நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியா வென்ற முதல் 6 பதக்கங்களுமே (3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்) வெயிட்லிப்டிங்கில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டெய்லர் மகன்: இந்தியாவுக்காக 3வது தங்கப் பதக்கத்தை வென்ற அச்சிந்தா மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம் தேவல்பூர் கிராமத்தில் வசிக்கிறார். அவரது தந்தை ஜகத் ரிக்‌ஷா தொழிலாளி. மாரடைப்பு காரணமாக 2013ல் இறந்து விட்டார். அதன் பிறகு தையல் தொழில் மூலம் அச்சிந்தாவின் அம்மா பூர்ணிமாவும், அவரது சகோதரர் அலோக்கும் உழைத்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். அவர்கள் வைத்த நம்பிக்கை இன்று தங்கப் பதக்கமாக அச்சிந்தாவின் கழுத்தை அலங்கரிப்பதுடன் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.

தலைவர்கள் வாழ்த்து: முன்னாள் உலக ஜூனியர் சாம்பியனான அச்சிந்தாவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், விளையாட்டு பிரபலங்கள் என்று பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: