ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பவானியில் குதிரை ரேக்ளா ரேஸ்

பவானி: பவானி - குமாரபாளையம் நண்பர்கள் சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பவானியில் குதிரைகள் ரேக்ளா ரேஸ் நேற்று நடைபெற்றது.பவானி - ஆப்பக்கூடல் ரோட்டில் சேர்வராயன்பாளையம் அருகே நடந்த இந்த பந்தயத்துக்கு பவானி நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கினார். பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் போட்டிகளைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.ஜி.நாத் (எ) மாதையன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் ரவி, ரேக்ளா அசோசியேசன் தலைவர் வெங்கிடு, முன்னாள் கவுன்சிலர் முத்துசாமி முன்னிலை வைத்தனர். புதிய குதிரை, சிறிய குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என நான்கு பிரிவுகளில் 7 மைல், 8 மைல்,  9 மைல் மற்றும் 10 மைல்  தொலைவுக்கு இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

இலக்கிலிருந்து புறப்பட்ட குதிரைகள் தளவாய்பேட்டை வரையில் ரோட்டில் சீறிப்பாய்ந்து சென்றது. இதனை சாலையோரங்களில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். முதலிடம் பெற்ற குதிரைகளுக்கு ரூ.20 ஆயிரம், 2ம் இடத்திற்கு ரூ.15,000, மூன்றாம் இடத்திற்குரூ.12,000, என ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பையை பவானி நகர திமுக செயலாளர் ப.சீ.நாகராஜன் வழங்கினார். திமுக கவுன்சிலர்கள் பாரதிராஜா, ரவி, பால்கார  மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் பாய்ந்து வரும்போது உடன் 15-க்கும் மேற்பட்ட பைக்குகளில் இருவர், மூவர் அமர்ந்து கூச்சலிட்டபடி பின்னால் துரத்திக் கொண்டே வந்ததால் விபத்து அபாயம் நிலவியது. குதிரைப் பந்தயத்தின்போது பவானி ஆப்பக்கூடல் செல்லும் ரோட்டில் வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதனால், இவ்வழியே எளிதில் செல்ல வேண்டிய தூரத்தை பொதுமக்கள் நீண்ட தொலைவுக்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டதால் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: