பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு தமிழகத்திற்கு வரும் முதலீட்டை கெடுக்க வேண்டாம்: எடப்பாடிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

சென்னை: அரசின் நோக்கத்திற்கு எதிராக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு தமிழகத்திற்கு வரும் முதலீடு, இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்பை கெடுக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: “வேதாந்தா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனம்” சார்பில் தமிழ்நாட்டில் செய்யவிருந்த முதலீடு ஏதோ மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத அறியாமையில் அறிக்கை விடுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேதாந்தா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், சுற்றுச்சூழல் பாதிப்புக் காரணங்களுக்காக மாசுக் கட்டுப்பாடு வாரியம், இயக்குவதற்கான இசைவினை வழங்க மறுத்துள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்துடனான தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடு தொடர்பான உறவு 2006ம் ஆண்டு துவங்கி இன்றுவரை சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

உலக நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் இன்றைக்கு தமிழகத்தின்பால் திரும்பி உள்ளது. பெரும் முதலீடுகளை ஈர்த்து, முதல்வர் நிர்ணயித்துள்ள லட்சிய இலக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைந்திட தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது மட்டுமின்றி-அதற்கான திசையில் வேகமாக பயணித்து வருகிறது. தொழில் தொடங்க வருவோரிடம் அதிமுக ஆட்சியில்- அதுவும் எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போதிருந்த “கலாசாரத்தை” மனதில் வைத்துக் கொண்டு எங்கள் முதல்வரின் நேர்மையான ஆட்சி மீது கல்லெறிய வேண்டாம் என்றும்- தொழில் வளர்ச்சிக்காக தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் இந்த அரசின் நோக்கத்திற்கு எதிராக “பொய் பிரசாரத்தில்” ஈடுபட்டு- தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம் என்று பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Related Stories: