ஆம்பூரில் மத்திய உளவுத்துறையிடம் சிக்கியவர் தீவிரவாத இயக்க தொடர்பில் இருந்த மாணவன் சிறையில் அடைப்பு: விசாரணையில் திடுக் தகவல்கள்

வேலூர்: தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக மத்திய உளவுத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்த ஆம்பூர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் மீர்அனாஸ்அலி (22). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவரை மத்திய உளவுத்துறையினர் பிடித்தனர். அப்போது அவர் லேப் டாப் இயக்கி கொண்டிருந்தார். உளவுத்துறையினர் தன்னை பிடித்ததும் லேப்டாப்பை கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது.

சேதமான லேப் டாப் மற்றும் 2 செல்போன்களுடன் பிடிப்பட்ட மீர்அனாஸ்அலியை அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து நள்ளிரவு 12 மணி வரை மத்திய உளவுத்துறையினர் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மீர்அனாஸ்அலி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் செயல்பட்டு வந்ததும், மொராக்கோ, சிரியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. அதோடு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவானவர்களை ஒருங்கிணைப்பதிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தங்கள் விசாரணையை முடித்துக் கொண்ட உளவுத்துறை போலீசார், கைது செய்யப்பட்ட மீர்அனாஸ்அலியை ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்களில் செயல்பட்டது, தேச விரோத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீர்அனாஸ்அலி, ஆம்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வாலிபரையும் கண்காணித்து வருகின்றனர்.

* ஒரே நேரத்தில் 29 இடங்களில் அதிரடி

நாடு முழுவதும் நேற்று முன்தினம் அதிகாலை ஒரே நேரத்தில் சேலம், பெங்களூரு, ஈரோடு உட்பட 29 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பும், ஐபியும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories: