கும்பகோணம் நாராயணன் தெருவில் சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கும்பகோணம்: கும்பகோணம் நாராயணன் தெருவில் சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சோலையப்பன் தெரு அருகே உள்ளது நாராயணன் தெரு. இப்பகுதியில் வசிக்கும் பல்வேறு குடும்பத்தினர் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சற்று ஜாக்கிரதையாக பயணிக்கும் நிலை நீடிப்பதாக இப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குண்டும், குழியுமாக உள்ள நாராயணன் தெருவில் நீர்தேங்கி நோய் தொற்று பரவும் அபாயமும், நீர்தேங்கிய குழிகளில் வாகனத்தில் பயணிப்பதால் நிலை தடுமாறி கீழே விழும் அச்சம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பல வருடங்களாக இந்த நிலைமை நீடிப்பதால் மழைக்காலங்களில் ஏற்படும் நீர்த்தேக்கத்தால் துர்நாற்றம் வீசுவதுடன், சேறும் சகதியுமாக சாலைகள் உள்ளதால் மக்கள் வெளியில் அன்றாடம் அத்தியாவசிய வேலைக்கு செல்வதை சிரமமாக கருதுகின்றனர்.

இதுவரை எந்த நடவடிக்கையும் யாரும் மேற்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாலை வசதி அமைத்து தர பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: