தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா: கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில்  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் நடத்தப்படாமல் இருந்த ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து கோமதி அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் காலை 5.32 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள், சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெறும். தபசு திருவிழா 1ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு கோமதி அம்பாள், தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. கோயில் தியான மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம், மாலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், இரவு 8 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது.

விழாவில் 9 ஆம் திருநாளான ஆகஸ்ட் 8ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருநாள் 11 ஆம் திருநாளான ஆகஸ்ட் 10ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு  கோமதி அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார, பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 11.40 மணிக்கு மேல் 12 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் சங்கர நாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 12 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் இரவு 12 மணிக்கு கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Related Stories: