காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் சங்கேத் சர்கார்

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் பளுதூக்குதலில் ராணுவ வீரர்  சங்கேத் சர்கார்  வெள்ளி வென்றதின் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும்  22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் 2வது நாளான நேற்று பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் 55 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்  சங்கேத் சர்கார் (21 வயது), ஸ்நேட்ச் முறையில் 113 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 135 கிலோவும் என மொத்தம் 248 கிலோ தூக்கினார்.கிளீன் அண்டு ஜெர்க் முறையின் 3வது வாய்ப்பில் 139 கிலோ தூக்க முயிற்சித்த சர்காருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால் தங்கம் வெல்லும் வாய்ப்பு கை நழுவியது. இதே பிரிவில்  மலேசியாவின் முகமது அனிக்,  ஸ்நேட்ச் முறையில் 107 கிலோ , கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 142 கிலோ என மொத்தம் 249 கிலோ தூக்கி தங்கம் வென்றார். நூலிழையில் முதல் இடத்தை தவற விட்ட சர்கார் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கான  முதல் பதக்கமாக இது அமைந்தது. இலங்கை வீரர்  திலங்கா இஸ்ரு குமாரா 225 கிலோ(105+120) தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்தியாவின் பதக்க வேட்டையை  வெள்ளிகரமாக தொடங்கி வைத்துள்ள சங்கேத் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

Related Stories: