குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரம் எதிரொலி : அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம்!!

வாஷிங்டன் : குரங்கு அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வெடித்து கிளம்பிய குரங்கு அம்மை கிருமி தற்போது வரை 78 நாடுகளில் தீவிரமாக பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 4,600 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக காலிபோர்னியா மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 800 பேர் குரங்கு அம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் மட்டும் 261 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், குரங்கு அம்மை தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியாக சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் மருத்துவ அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காலிபோர்னியாவில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில், போதுமான தடுப்பூசிகளை பிடன் அரசு விநியோகிக்கவில்லை என்றும் சான் பிரான்சிஸ்கோ நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், 70,000 குரங்கு அம்மை தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில், பிடன் அரசு நிர்வாகம் 12,000 தடுப்பூசிகளை மட்டுமே விநியோகித்து இருப்பதாக மாகாண ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.   

Related Stories: